1. காரிருளில்
என் நேச
தீபமே
(பாமாலை
323)
Lead Kindly
Light
1. காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன்
வேறொளியில்லை வீடும் தூரமே நடத்துமேன்
நீர் தாங்கின் தூரக்காட்சி ஆசியேன்
ஓர் அடி மட்டும் என் முன் காட்டுமே
2. என் இஷ்டப்படி நடந்தேன் , ஐயோ! முன்னாளிலே
ஒத்தாசை தேடவில்லை இப்போதோ நடத்துமேன்
உல்லாசம் நாடினேன் திகிலிலும்
வீம்பு கொண்டேன் அன்பாக மன்னியும்
3. இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர் , இனிமேலும்
காடாறு சேறு குன்றில் தேவரீர் நடத்திடும்
உதய நேரம் வரக் களிப்பேன்
’பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு முன்வெளிச்சங்காட்ட அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்’ யாத்திராகமம் 13:21
சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் சிக்காகோ நகரில் நடந்த மத ஆராய்ச்சி மாநாட்டில் (Parliament of
Religions) எல்லா மதத்தினரும் பாடக்கூடிய ஒரு பாடலைத் தேர்ந்தெடுக்க முயன்று, கடைசியில், ‘காரிருளில் என் நேச தீபமே’ என்னும் பாடலைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் அதைப் பாடி வந்தனர்.
இப்பாடலை எழுதியவர் ஜான் ஹென்ரி நியூமென் என்னும் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார். அவர் 1801ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 21ம் தேதி லண்டன் மாநகரில் ஒரு செல்வந்தரான வங்கி முதலாளியின் புதல்வராகப் பிறந்தார். அவரது பெற்றோர் அவரைச் சட்டப்படிப்புக்கு அனுப்ப விரும்பினர். ஆனால் அவரோ ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரித்துவக் கல்லூரியில் குருத்துவ ஊழியத்திற்காகப் பயின்று, 1824ம் ஆண்டு தூய க்ளெமென்ட் ஆலயத்தின் குருவாக அபிஷேகம் பெற்றார். சில ஆண்டுகளுக்குப்பின் 1828ம் ஆண்டு தூய க்ளெமென்ட் ஆலயத்தின் தலைமை குருவாக (Vicar) நியமனம் பெற்றார். ஆரம்பத்தில் அவர் ஆங்கிலச் சபையைச் சேர்ந்திருந்தாலும், காலக் கிரமத்தில் ரோமச் சபையில் விருப்பமுடியவராகக் காணப்பட்டார். 1841ல் ஆங்கிலத் திருச்சபையைக் குறித்த ஒரு வெளியீட்டை அவர் பிரசுரிக்கவே, அதைக் குறித்து கடுமையான அபிப்பிராய பேதம் உண்டானதால், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்னர் 1845ல் அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்து, 1879ல் கார்டினல் என்னும் உயர்பதவியையும் பெற்றார்.
1833ம் ஆண்டு நியூமென் இத்தாலி நாட்டுக்குச்சென்று, அங்கு நோய்வாய்ப்பட்டு, சுகமடைந்தபின், இங்கிலாந்துக்குத் திரும்ப உத்தேசித்து, ஆரஞ்சுப்பழங்களை ஏற்றிச்சென்ற ஒரு பாய்மரக் கப்பலில் பிரயாணமானார். சரியான திசையில் காற்று வீசாததால் மத்தியதரைக் கடலில் கார்சிக்கா, சார்டினியா தீவுகளுக்கிடையிலுள்ள
போனிபேஸியோ ஜலசந்தியில் ஒரு வாரம் காத்திருக்க நேரிட்டது. இவ்வாரத்தை அவர் ஆங்கிலக்கவிகள் எழுதுவதில் கழித்தார். இவ்விதமாக 1833ம் ஆண்டு, ஜூன் மாதம் 16ம் தேதி எழுதப்பட்ட மூன்று கவிகளே, உலகமெங்கும் பாடப்பட்டு வருகிற ‘காரிருளில் என் நேச தீபமே’ என்னும் பாடலாகத் திகழ்கின்றது.
ஆங்கிலச் சபையை விட்டு ரோமச்சபையைச் சேருமுன் அவருக்கிருந்த மனப்போராட்டத்தின்போது
இதை எழுதியதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இது தவறு; ஏனெனில் இப்பாடலை எழுதிய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் சபை மாறினார். அவர் நேசித்து வந்த திருச்சபையைக் குறித்து அவருக்கிருந்த மன வருத்தமும், தன் சுய தேசத்தையும் தன் இனத்தவரையும் சேரவேண்டும் என்ற ஆவலும், அவர் நோய்வாய்ப்பட்டிருந்த
காலத்தில் அவருக்கிருந்த வேதனையும் பெலவீனமுமே இப்பாடலை எழுதுவதற்குத் தன்னைத் தூண்டிய காரணங்கள் என அவரே கூறியுள்ளார். தான் ஒரு ஊழியம் செய்யவேண்டியவர் என நம்பினார். ஆனால் அவ்வூழியத்தை எங்கே, எவ்விதம் செய்வது என்று தெரியாமல், தெய்வ நடத்துதலுக்காக இந்த ஜெபப் பாடலை எழுதினார். இரவில் தீபஸ்தம்பமும், பகலில் மேகஸ்தம்பமும் இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட நாட்டுக்கு வழி நடத்தியதை அவர் எண்ணியிருக்கலாம்.
இப்பாடலின் கடைசி வரியில், ‘மறைந்துபோன நேசரை’ (Angel faces) என்பதைக் குறித்து பலவிதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரகாசித்த விசுவாசம், நம்பிக்கை முதலிய ஒளிக்கதிர்கள், பின்னால் மங்கி, தூரமாகச் சென்றதைக் குறிக்கும் என்பர் சிலர். ரட்சிப்பின் பிள்ளைகளுக்கு பயன்படுமாறு கடவுள் அனுப்பும் வழிகாட்டிகளைக் குறிக்கும் என்பர் சிலர். இன்னும் சிலர், பூலோக வாழ்க்கையில் நம்மோடிருந்து, நமக்கு முன்னால் சென்ற சிநேகிதரைக் குறிக்கும் என்பர். இப்பாடலை எழுதி சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், இதை எழுதிய கார்டினல் நியூமெனைக் கேட்டபோது, ‘எதை மனதில் கொண்டு எழுதினேன் என்று எனக்கு ஞாபகமில்லை’ எனக் கூறினார். ஆகையால் இது மறைபொருளாகவே இருக்கிறது. ஆயினும் இப்பாடல் உலகப் பிரகாரமாகவும், ஆத்துமப் பிரகாரமாகவும், மனம் அலசடிப்பட்டுக்கொண்டிருக்கும் வேளைகளில், கிறிஸ்தவர்களுக்கும்,
இதர மதத்தினர் பலருக்கும், ஆறுதலும், நம்பிக்கையும் அளிக்கும் ஒரு பாடல் என ஐயமின்றிக் கூறலாம்.
கார்டினல் நியூமென் 1890ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 11ம் தேதி பர்மிங்ஹாம் நகரில், தமது 90ம் வயதில் காலமானார்.
0 comments:
Post a Comment