Friday, 22 July 2016

1. கர்த்தரைக்குறித்த அறிவும் உணர்வும்

1.  கர்த்தரைக்குறித்த அறிவும் உணர்வும்


     மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். ஏசாயா 1:3

     2013ம் ஆண்டு நியுயார்க்கில் நடந்த உண்மைச்சம்பவம், சிசில் வில்லியமஸ் (Cecil Williams) என்ற 61 வயது கண்பார்வையற்றவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். ஒருநாள் சிசில் பல் மருத்துவரை பார்ப்பதற்காக நாயுடன் சென்றார். ரயில் நிலையத்தில் ஒரு பயணியர் மேடையில் நின்றுகொண்டிருந்தபோது சிசிலுக்கு மயக்கம் ஏற்பட்டது. தன் எஜமானனின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை  புரிந்து கொண்ட நாயானது, சிசிலை நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் விழுந்துவிடாமல் இருக்க கடுமையாக முயற்சித்தது. வேகமாக ஒலியெழுப்பி குறைத்து சிசிலுக்கு தொடர்ந்து முத்தமிட்டு அவரை எழுப்ப முயற்சித்தது. ஆனாலும் சிசில் மயங்கி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். உடனடியாக அந்த நாயும் தண்டவாளத்தில் குதித்து தன் எஜமானனை காப்பாற்றும் பணியைத் தொடர்ந்தது. அப்பொழுது அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ரயிலின் ஓட்டுனர், அந்த நாயின் அபாயக் குரலை கேட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்தார். இதனால் சிசிலும், அந்த நாயும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.
     பிரியமானவர்களே, ஒரு நாய்க்கு தன்னை வளர்த்த எஜமானின் மேல் எத்தனை பாசம் உண்டு பாருங்கள், ஆனால் நமக்கு ஜீவனை கொடுத்து, நமக்காக தம் சொந்த  குமாரனை ஜீவ பலியாக கொடுத்து நம்மை இரட்சித்த தேவனை நாம் எந்த அளவு பாசம் வைத்திருக்கிறோம்? நேசம் வைத்திருக்கிறோம்? கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொள்ளும் அநேகரிடத்தில் கர்த்தரை குறித்த பயம் இல்லை, பக்தி இல்லை, அவர் மேல் ஒரு நேசமோ, பாசமோ இல்லை. வாராவாரம் ஆலயத்திற்கு போய் வந்தால் அதுவே அவருக்கு செய்கிற பெரிய காரியம் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்!

     என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்-செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள் (எரேமியா 4:22) என்று தேவன் தம் மனக்குமுறலை தெரிவிக்கின்றார். நம்மை உண்டாக்கிய தேவனை நாம் அறியாதிருந்தால், அது எத்தனை பரிதாபம்!. சிறு பிள்ளைகள் கூட செருப்பு அணியாமல் பல நூறு கிலோ மீட்டர்கள், ஹரோஹரா சொல்லிக்கொண்டு நடக்கின்றார்கள் அவர்களுக்கு இருக்கிற வைராக்கியம் நமக்குள் இருக்கிறதா என்று பார்த்தால் மிகவும் குறைவுதான்!

     கர்த்தரை குறித்த அறிவும், உணர்வும் நமக்குள் வர வேண்டும். இன்றைய நாட்களில் அநேக கிறிஸ்தவ வீடுகளில் காலையில் எழுந்தவுடன் வேதத்தை வாசிப்பதில்லை, ஜெபிப்பதில்லை! இதிலே கணவர் மனைவியையும், மனைவி கணவரையும் உற்ச்சாக்கப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வேதத்தை தியானிக்க சொல்லி கற்று கொடுக்க வேண்டும். கர்த்தரை குறித்த வைராக்கியம் அவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும்படியாக செய்ய வேண்டும். மற்றவர்கள் இந்த பிள்ளைகளை காணும்போது, கிறிஸ்து இவர்களுக்குள் இருப்பதை காணட்டும். தேவனை அறிகின்ற அறிவில், குடும்பமாக, திருச்சபையாக வளர்ந்து, உணர்வுடையவர்களாய் வாழ்ந்து தேவனை மகிமைப்படுத்துவோம்.


0 comments:

Post a Comment